யுக்ரேனுக்கு அமெரிக்கா 'கொத்துக்குண்டுகள்' கொடுப்பதை நட்பு நாடுகளே எதிர்ப்பது ஏன்? அதில் ஒளிந்திருக்கும் ஆபத்து என்ன?
யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், போரில் யுக்ரேனுக்கு உதவ, கொத்துக் குண்டுகளை அனுப்பிவைக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பதற்கு பல நட்பு நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
சர்ச்சைக்குரிய கொத்துக் குண்டுகளை யுக்ரேனுக்கு அனுப்புவதை அமெரிக்க அரசு வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. அதிபர் ஜோ பைடன் இதை "மிகவும் கடினமான முடிவு" என்று தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கொத்துக் குண்டுகளை யுக்ரேனுக்கு அனுப்பும் அமெரிக்காவின் முடிவை எதிர்ப்பதாகத் தெரிவித்தன.
கொத்துக் குண்டுகள் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் 100க்கும் மேற்பட்ட நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த குண்டுகள், தாக்குதல் நடத்தும் இலக்கில் பரந்த அளவுக்கான பகுதியில் கண்மூடித்தனமாக அப்பாவி பொதுமக்களை கொல்லக்கூடிய சிறிய குண்டுகளை பாய்ச்சுகின்றன.
இது போன்ற குண்டுகள் ஈரப்பதம் மிக்க அல்லது மென்மையான சமவெளிகளில் விழும் போது அப்போதே வெடிப்பதில்லை. தாக்குதல் நடந்த பின் ஏதோ ஒருநாளில் வெடித்து ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பல தசாப்தங்களுக்குக் கூட இவை வெடிக்காமல் கிடந்து பின்னர் வெடிக்கும் ஆபத்து இருக்கிறது. இது போல் எத்தனை சதவிகித குண்டுகள் வெடிக்காமல் பின்னர் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த விவரங்கள் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன.
800 மில்லியன் டாலர் (£626 மில்லியன்) மதிப்புள்ள இராணுவ உதவிகளின் ஒரு பகுதியாகவே இந்த கொத்துக் குண்டுகள் யுக்ரேனுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன என நட்பு நாடுகளிடம் தெரிவித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் வெள்ளியன்று CNNக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
"யுக்ரேனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்பும் முடிவை எடுக்க 'சிறிது காலம்' பிடித்ததாக" அதிபர் பைடன் கூறினார். ஆனால் "யுக்ரேனியர்களிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதால்" கொத்துக் குண்டுகளை அனுப்ப அவர் முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு
இதற்கிடையே, அமெரிக்காவின் இந்த முடிவுக்கு மனித உரிமைக் குழுக்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன. கொத்துக் குண்டுகள் "மோதல் முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் பொதுமக்களின் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், யுக்ரேனுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க கொத்துக் குண்டுகள், ஏற்கனவே இப்போரில் ரஷ்யா பயன்படுத்திய கொத்துக் குண்டுகளை விட ஆபத்து குறைவானவை என்றார்.
ஆனால் அமெரிக்காவின் மேற்கத்திய நட்பு நாடுகள் சில இந்த முடிவுக்கு சனிக்கிழமையன்று எதிர்ப்பு தெரிவித்தன.
அமெரிக்காவின் முடிவு குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேட்ட போது, கொத்துக் குண்டுகளை ஒழிப்பது தொடர்பான மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 123 நாடுகளில் பிரிட்டனும் ஒன்றாகும் என்றும், இந்த உடன்படிக்கை, கொத்துக் குண்டுகளைத் தயாரிப்பதையோ, பயன்படுத்துவதையோ தடை செய்கிறது என்றும் தெரிவித்தார்.
லிதுவேனியாவில் நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அதிபர் பைடன் நேற்று பிரிட்டன் பயணம் மேற்கொண்டார். அங்கு பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்திப்பதற்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.


0 Comments: