இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்' தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டதாக நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த ஜுன் மாதம் அறிக்கையொன்றின் ஊடாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், மனித புதைக்குழிகள் தொடர்பிலான பேச்சுக்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஓரிரு தினங்களிலேயே மற்றுமொரு மனித புதைக்குழி தொடர்பிலான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக பிரதான வீதியோரத்தில் நீர்வழங்கல் அமைச்சினால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது.
இதன்போது, பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, போலீஸார் இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவூட்டியதுடன், குறித்த பகுதியில் மனித புதைக்குழி உள்ளதா என்பது தொடர்பிலான பூர்வாங்க அகழ்வு பணி கடந்த 6-ஆம் தேதி இடம்பெற்றது.
இதன்போது, குறித்த இடத்திலிருந்து மனித எச்சங்கள் என அடையாளம் காணப்பட்ட சில எச்சங்களை அதிகாரிகள் அடையாளப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 13-ஆம் தேதி முல்லைத்தீவில் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் எங்கெங்கு 'மனித புதைக்குழி' அடையாளம் காணப்பட்டுள்ளது?
இலங்கையில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 'மனித புதைக்குழிகள்' அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் மூன்று இடங்களில் மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கையின் வடப் பகுதியிலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியிலேயே கடந்த 29ம் தேதி மூன்றாவது 'மனித புதைக்குழி' அடையாளம் காணப்பட்டது.
ஏனைய இரண்டு புதைக்குழிகளும் முல்லைத்தீவு நகரிலிருந்து இருவேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டிருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையிலான இறுதி யுத்தம் முடிவடைந்த இடமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
இலங்கையில் மூன்று தசாப்த காலங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி நிறைவுக்கு கொண்டு வந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும், மே 18ம் தேதி ஆயிரக்கணக்கான தமது உறவுகளை இலங்கை ராணுவம் கொலை செய்ததாக யுத்தத்தில் நேரடி பாதிப்புக்களை எதிர்கொண்ட குடும்பங்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

'மனிதப் புதைக்குழிகள்' காணப்படும் இடம் எப்படிப்பட்டது?
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே இறுதி கட்ட யுத்தம் இடம்பெற்றது.
இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட பலர் நந்திக்கடல் பகுதியில் வைத்தே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதேஇடத்தில் வைத்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.
இறுதிக் கட்ட யுத்தம் முடிவடைந்த நந்திக்கடல் பகுதியிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலேயே கொக்குத்தொடுவாய் பகுதி அமைந்துள்ளது.
கொக்குத்தொடுவாய் பகுதியானது 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் இங்கு புதைக்கப்பட்டனரா?
இந்த 'மனித புதைக்குழியில்' தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமானது என கருதப்படும் சீருடைகள் காணப்பட்டமையினால், இது விடுதலைப் புலி உறுப்பினர்களுடைய எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை தமிழர்கள் வெளியிடுகின்றனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சுமார் 27 வருட காலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இடமொன்றில் இவ்வாறு மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டது, காணாமல் ஆக்கப்பட்டவர்களை ராணுவத்தினர் கொலை செய்து புதைத்திருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச மக்களினால் வெளியிடப்படும் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ் இலங்கை ராணுவத்திடம் வினவியது.
''எம்மால் அப்படி கூற முடியாது. ஏனெனில், அதனை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றஞ்சுமத்துவதில் அர்த்தம் கிடையாது. யுத்தத்தின் போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போதும் கிடைக்கின்றன. சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளின் பின்னரே இது எந்த காலப் பகுதிக்கு சொந்தமான எச்சங்கள் என்பதை கூற முடியும். அடுத்தது இது மனித எலும்பு எச்சங்களா என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். விசாரணைகளின் பின்னரே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்." என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவிக்கின்றார்.
'மனிதப் புதைக்குழியில்' இதுவரை என்ன கிடைத்திருக்கிறது?
இவ்வாறான மனிதப் புதைக்குழிகளில் 20 புதைக்குழிகளில் மாத்திரமே அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன.
1983 - 2009ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதலின் போது, பாதுகாப்பு படையினரால் திட்டமிட்டும், பரந்தளவிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான நினைவுப்படுத்தலாக நாட்டின் வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட இதர மனிதப் புதைக்குழிகளின் அகழ்வுப் பணிகள் காணப்படுவதாக அதில் கூறப்படுகின்றது.
மன்னாரில் அடையாளம் காணப்பட்ட மனித புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் மாதிரிகள் ஆய்வுகளுக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் பல வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
எனினும், அந்த மனித எச்சங்கள் ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானவை என அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
0 Comments: